அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேகரித்தது அரசு பள்ளி மாணவர்களுக்கு 5,191 புத்தகங்கள் விநியோகம்: மாநகராட்சியிடம் வழங்கினார்

சென்னை: தன்னிடம் இருந்த புத்தகங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேகரித்து, சென்னை அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சியிடம் வழங்கினார். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர் நிலைப்பள்ளிகளும், 92 நடுநிலைப்பள்ளிகளும், 119 தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, மாணவ, மாணவியர்களின் வாசிக்கும் திறன் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்திடும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி நூலகங்களிலிருந்து புத்தகங்களைப் பெற்று வீட்டிலும் விரும்பி வாசித்து பயன்பெறும் வகையில் பள்ளி இல்ல நூலகமானது ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது, 77.40% மாணவர்கள் தமிழ்மொழி புத்தகங்களையும், 22.60% மாணவர்கள் ஆங்கில புத்தகங்களையும் பெற்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தனக்கு பூங்கொத்து மற்றும் சால்வைகளை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை வழங்க வேண்டுமென தெரிவித்ததோடு மட்டுமல்லாது, அந்த புத்தகங்களை பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கும்,  நூலகங்களுக்கும் வழங்கி வருகிறார். இந்நிலையில், சென்னை ரிப்பன் கட்டத்தில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னிடம் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை சென்னை அரசு பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் மேயர் பிரியாவிடம் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் துறை ரீதியாக  மருத்துவ பணிகள் மற்றும் கள ஆய்வுகளுக்கு செல்லும்போது அங்கும் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகங்களை பரிசாக அளித்தனர். அந்த புத்தகங்கள் அனைத்தையும் இன்றைக்கு ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  புத்தகங்கள் விழுப்புரம் மாவட்டம், அந்தியூர் என்ற கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது 5,191 நூல்கள் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் முன்னிலையில் வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளை பொறுத்தவரை 1.13 லட்சம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் நூலகம் உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதன்படி எனக்கு வந்த இந்த நூல்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: