குற்றாலம் மெயினருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: 3வது நாளாக குளிக்க தடை நீடிப்பு

தென்காசி: குற்றாலம் அருவிகளில் இன்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயினருவியில் நீராட வந்தவர்கள், செல்போனில் போட்டோ எடுத்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

குற்றாலம் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  தொடர்ந்து திங்கள் நள்ளிரவு முதல் செவ்வாய்கிழமை அதிகாலை வரை மழை கொட்டியது. இதனால்  அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறையாததால் 2வது நாளாக நேற்றும் மெயின் அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டிருந்தது. மாலையில் சீற்றம் சற்று  தணிந்ததால் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இரவில்  மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மெயின்அருவியில் நீர்வரத்து நீடிப்பதால் இன்று (புதன்) 3வது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அருவியை பார்வையிட்டு, தங்களது செல்போன்களில் போட்டோ எடுத்து சென்றனர். பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் மிதமாக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அந்த 2 அருவிகளிலும் நீராடி மகிழ்ந்தனர்.

Related Stories: