அதிமுக ஆட்சியால் சிறுத்த நீர்நிலைகளை சீராக்க வேண்டும்: தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது.

அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயத்திற்காக மனக்காட்டு குளம் அமைக்கப்பட்டது. இந்த குளம் முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி முழுவதும் மாமரம், இலவமரம் உள்ளிட்ட மரங்களை நட்டு ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் புகார் மனு அளித்தும், அப்போதிருந்த அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. குளத்தில் அமைக்கப்பட்ட மதகுகளை சேதப்படுத்தியதால் குளத்தில் நீர் வற்றி விடுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்பொழுதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், குளம் முழுவதும் நீர் நிறைந்துள்ள நிலையில், குளத்தின் மதகுகள் உடைக்கப்பட்டு நீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த குளத்தில் நீர் தேக்கி வைத்தால் அந்தப் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலம் பயனடையும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான குளம், ஏரி, கண்மாய்கள் உள்ளன.

இந்த நீர்நிலைகளில் தேங்கும் பாசனநீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன. இந்த கண்மாய்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை மீட்க வேண்டும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர். அதேபோல பல கண்மாய்களில் முறையான குடிமராமத்து பணிகளும் நடக்கவில்லை என புகார்கள் எழுந்தன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே, பொதுப்பணிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு கண்மாய்கள் மீட்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய்களை மீட்க தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு ெகாண்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டத்திலும், செயல்பாடுகளிலும், அதிரடி நடவடிக்கைகளிலும், இது அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’ என்றனர்.

Related Stories: