ரூ. 200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன்

புதுடெல்லி: ரூ. 200 கோடி மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரன் டெல்லி திகார் சிறையில் இருந்தபடி, தொழிலதிபர்களை மிரட்டி ரூ.200 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. விசாரணையின் போது, சுகேஷும், பாலிவுட் நடிகை ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனால், ரூ.  200 கோடி மோசடியில் நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

பலகட்ட விசாரணைக்குப் பின், துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரை குற்றவாளியாக சிபிஐ சேர்த்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகை ஜாக்குலின் மனுதாக்கல் செய்தார். அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரிடம் அதிகளவில் பணம் இருப்பதால், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார் என்று நீதிமன்றத்தில் கூறியது. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், சிபிஐ.க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கை சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் நேற்று விசாரணை நடத்தி, ஜாக்குலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ரூ.50 ஆயிரத்துக்கான பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கான தனிநபர் உத்தரவாதமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: