ஆட்டோ, ஆம்னி பஸ்களுக்கான பர்மிட் கட்டணம் உயர்கிறது: போக்குவரத்து துறை முடிவு

சென்னை ஆட்டோ, டாக்சி, ஆம்னி பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து மோட்டர் வாகனங்களுக்கான பர்மிட் கட்டணம், புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மோட்டர் வாகன விதிகள் 1989-ன்படி, அனுமதி வழங்குதல், அனுமதிகளைப் புதுப்பித்தல், அனுமதி பத்திரங்களை மாற்றுதல் மற்றும் அனுமதியை புதுப்பிப்பதற்கான காலதாமதமான விண்ணப்பங்கள் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான வரைவுத் திருத்தத்தை போக்குவரத்து துறை  அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம், ஆட்டோ, வாடகை கார், தனியார் ஆம்னி பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான பர்மிட், புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 177% வரை கட்டணம் உயர வாய்ப்புகள் உள்ளன. இதுவரை, மோட்டார் வாகன வரி, கற்றோர் உரிமப் பதிவு (எல்எல்ஆர்) கட்டணம், ஓட்டுநர் உரிமக் கட்டணம் மற்றும் துறையின் முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருக்கும் சில கட்டணங்கள் மற்றும் வரிகளை அரசாங்கம் திருத்தவில்லை.

இதுகுறித்து சி.ஐ.டி.யூ மாநில செயல் தலைவர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் அமலில் உள்ள அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் பர்மிட், புதுப்பித்தல் உள்ளிட்ட போக்குவரத்து துறை சேவைக்களுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிடுவது என்பது ஆட்டோ தொழிலை மேலும் நசுக்கும் செயலாகும். மேலும், தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கும் செயல். 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ பர்மிட், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் செலவாகும். ஆனால் இப்போது ரூ.60 ஆயிரம் வரை ஆகிறது. மேலும், 2013ம் ஆண்டு மீட்டர் கட்டணத்தின்படி தான் பொதுமக்களிடம் பணம் பெற்று வருகிறோம். இதுவரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து வருகிறோம்.

அதனை அரசு பரிசீலித்து கட்டணத்தை கூடுதலாக நிர்ணயம் செய்யும் பட்சத்தில் வரவேற்க தயாராக உள்ளோம். மாறாக கட்டணம், அபராதம் மட்டும் அதிகரிக்கப்படுவது வேதனையளிக்கிறது. எனவே, அரசு இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறியிருப்பதாவது:  ஆம்னி பேருந்து தொழில் என்பது தற்போது மிகவும் நலிவடைந்துள்ள நிலையில், போக்குவரத்து துறை மேலும் சேவைக்கட்டணங்களை அதிகரிப்பது என்பது கடினமாக உள்ளது. மேலும், ஒரு புறம் ஒன்றிய அரசு டீசல், சுங்க கட்டணம், இருக்கை மீதான வரி, உதிரி பாகங்கள் விலை உயர்வு போன்றவற்றால் உரிமையாளர்கள் நஷ்டத்தை தாங்கி வருகிறோம். இந்த சூழலில் பர்மிட், புதுப்பித்தல் கட்டண உயர்வது மேலும் இத்தொழிலை நசுக்குவதாக அமையும். இவ்வாறு கூறினார்.

வாகனங்களுக்கான பர்மிட் கட்டணம் விவரம்

வாகனங்கள்    பழைய கட்டணம்    புதிய கட்டணம்

பயணிகள் வாகனம்    ரூ.1,500    ரூ.3,000

பஸ்,சரக்கு வாகனம்    ரூ.1,200    ரூ.3,000

வேன்கள்    ரூ.750    ரூ.1,500

ஆட்டோக்கள்    ரூ.300    ரூ.400

டாக்சி    ரூ.525    ரூ.1,100

ஆம்னி பேருந்து    ரூ.1,500    ரூ.5,000

புதுப்பித்தல் வாகனங்களுக்கான புதிய கட்டண விவரம்

வாகனம்    பழையது    புதியது

ஆட்டோக்கள்    ரூ.160    ரூ.325

டாக்சி    ரூ.415    ரூ.600

ஆம்னி பேருந்து    ரூ.900    ரூ.2,500

Related Stories: