கேரள வியாபாரிகள் வருகை குறைவால் பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் இன்று, கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மாடுவிற்பனை மந்தத்தால் குறைவான விலைக்கு போனது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இடத்தில் இன்று நடந்த மாட்டு சந்தையில், மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து மாடுகள் வரத்த ஓரளவு இருந்தது. இந்நிலையில், வரும் 17ம் தேதி சபரிமலை சீசன் துவங்க உள்ளதால், அந்நேரத்தில் மாடுவிற்பனை குறையும் என்பதால், இன்று நடந்த சந்தைநாளின்போது கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

இதனால், சந்தையில் மாடுவிற்பனை மந்தமானதுடன் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.  இதில், பசுமாடு ரூ.32 ஆயிரத்துக்கும், காளை மாடு ரூ.34 ஆயிரத்துக்கும், எருமை ரூ.35 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ரூ.13 ஆயிரத்துக்கும் என கடந்த வாரத்தைவிட குறைவான விலைக்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் ரூ.1.80 கோடி வர்த்தகம் இருந்தது. இன்று ரூ.1.20 கோடிக்கே வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: