7 பேர் விடுதலையை எதிர்த்து காங். சார்பில் மறுசீராய்வு மனு: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது தமிழக அரசால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர்கள் தமிழக கவர்னருக்கு தங்களை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால் பின்னர் அந்த கோப்பு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அதை ஜனாதிபதி நிராகரித்தார். மீண்டும் கொடுத்த மனுவை கவர்னர் காலதாமதப்படுத்தியதாக கூறி உச்சநீதிமன்றம் ராஜீவ்காந்தி வழக்கில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதனை மேற்கோள் காட்டிய 6 பேரும் விடுதலை செய்ய வேண்டுமென கோரியதால் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தற்போது விடுதலை செய்வது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பையே நீதிமன்றமே மாற்றுகிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.

தீவிரவாதிகள் யாரை வேண்டுமென்றால் கொலை செய்யலாம். நாம் வெளியே வரலாம் என்ற மனப்போக்கை ஏற்படுத்துகிறது. இதனை ஒருசில அரசியல் கட்சிகள் கொண்டாடுகிறது. மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனே மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: