கொலை, கடத்தல், திருட்டு குற்றவாளிகளுக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி தண்டனை: நீதிபதிகளுக்கு தலிபான் தலைவர் உத்தரவு

காபூல்: கொலை, கடத்தல், திருட்டு வழக்கின் குற்றவாளிகளுக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என நீதிபதிகளுக்கு ஆப்கானின் தலிபான் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்டில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானைக் கொண்டு வந்தனர். இருந்தாலும் அங்குள்ள பெண்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தலிபான்  தலைவர் மவ்லவி ஹெபத்துல்லா அகுந்த்சாதா வெளியிட்ட உத்தரவில், ‘இஸ்லாமிய சட்டத்தை நீதிபதிகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ‘தலிபான் தலைவரை நீதிபதிகள் குழு சந்தித்தது. கொலை, கடத்தல், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, இஸ்லாமிய சட்டத்தின்படி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், முதன்முறையாக நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவித்தது இதுவே முதல் முறை என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: