திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை 49 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் குனிச்சி ஏரி நீர் 40 வீடுகளில் புகுந்தது-‘நீர்நிலைகளுக்கு செல்லாதீர்’ என கலெக்டர் அறிவுறுத்தல்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 39 ஏரிகள் நிரம்பி வழிகிறது. இதில் 49 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் குனிச்சி ஏரியின் வெள்ள நீர் 40 வீடுகளில் புகுந்தது. மேலும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவு, பகல் நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் தற்போது வரை 32 ஏரிகள் நிரம்பியுள்ளது. இதில் குனிச்சி ஏரி கடந்த 49 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிரம்பி வழிந்தது. இந்த ஏரி நிரம்பி தண்ணீர் வழிவதால் ஏரி அருகே உள்ள செல்வனூர் குடியிருப்பு பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் நனைந்து சேதமானது.

வீடு மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் அச்சமங்கலம், மேல்அச்சமங்கலம், அடித்தூர் உள்ளிட்ட ஏரிகளும் நிரம்பியதால் அப்பகுதி மக்கள் ஆடுவெட்டி பூஜை செய்து வழிபட்டனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணையும் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. இதன்காரணமாக அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறுகையில், ‘தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏரிக்கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும்.

அவர்களுக்கு தங்க முகாம்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் யாரும் சென்று குளிப்பதோ ‘செல்பி’ எடுக்கவோ கூடாது. இதை மீறினால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தவேண்டும்’ என்றார்.

Related Stories: