நெல்லை அருகே தொடர் திருட்டு பள்ளி ஆசிரியர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை-தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

நெல்லை : ஆலங்குளத்தில் அடுத்தடுத்த தெருவில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆலங்குளம் காமராஜ் நகரில் கடையம் பிடிஓ திருமலைமுருகன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்ாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சம்பவ நடைபெற்ற இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் முகமூடி அணிந்த இருவர் கையில் கம்பியுடன் நடமாடுவது காட்சி பதிவாகியிருந்தது. இந்த காட்சியை அடிப்படையாக வைத்து முகமூடி அணிந்த மர்ம நபர்களை ேபாலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இந்நிலையில் அதே தெருவில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் ஆலங்குளம் அருகே கடங்கனேரியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சொந்த ஊரான ஊத்துமலைக்கு சென்று விட்டு நேற்று காலை ஆலங்குளம் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பூட்டை உடைத்து 56 கிராம் தங்கநகை திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து அவர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் திருட்டு நடைபெற்ற வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே கொள்ளை நடைபெற்ற வீட்டிலும், தற்போது திருட்டு நடைபெற்ற வீட்டில் ஒரே பாணியில் தான் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே, இந்த திருட்டு சம்பவத்திலும் முகமூடி கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஏற்கனவே கொள்ளை நடைபெற்ற போது அன்றைய தினத்தில் இந்த வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். ஆலங்குளத்தில் அடுத்தடுத்து ஒரே தெருவில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: