சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர்..!!

தேனி: சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராகியுள்ளார்.  தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி இவரது தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை  உயிரிழந்தது. வனத்துறை நடத்திய விசாரணையில், ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இருப்பினும் தோட்ட உரிமையாளர் என்ற அடிப்படையில் ரவீந்திரநாத் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், ரவீந்திரநாத் எம்.பி.க்கு வனத்துறை சார்பாக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக அனுப்பப்பட்ட சம்மனில் ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராகவில்லை. மாற்றாக வழக்கறிஞர் மூலம் தனது விளக்கத்தை கடிதம் மூலமாக அனுப்பி இருந்தார். கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வனத்துறை சார்பில் 2ம் முறையாக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் தேனியில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி முன்னிலையில் ரவீந்திரநாத் ஆஜராகியுள்ளார்.

Related Stories: