ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2.5 கோடியில் தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சி: நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.5 கோடி செலவில் தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்திடும் பொருட்டு, 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்திட பயிற்சிகள் வழங்கப்படும். சேவை சார்ந்த தொழில்கள் அமைக்க தேவையான பயிற்சிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (டிஎன்ஏயு), மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (சிஐபிஇடி), தேசிய நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம் (என்ஐஎப்டி), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ), மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சிஎப்டிஆர்ஐ), நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம் (என்டிடிஎப்), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் (ஐஐபி) போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் ரூ.2.5 கோடி செலவில் வழங்கப்படும்” என்றார்.

அதன்படி, 2000 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண்மை பல்கலைக்கழகம், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், தேசிய நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் அமைக்க தேவையான பயிற்சி அளிக்க நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: