போஸ் கொடுப்பதற்காக பாம்பை பிடித்து ‘செல்பி’ எடுத்த வியாபாரி பலி: உத்தரபிரதேச கண்காட்சியில் சோகம்

பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பரேலி நகர் அடுத்த ஜோகி நவாடா பகுதியை சேர்ந்த வியாபாரி தரம்வீர் என்பவர் குடும்பத்துடன் புடான் பகுதியில் நடந்த கண்காட்சியை பார்க்க சென்றார். அப்போது பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அதைபார்த்த தரம்வீர், தான் அந்த பாம்பை பிடித்து பார்க்க வேண்டும் என்று பாம்பாட்டியிடம் கேட்டார். அவரும், பாம்பை அவரது கையில் பிடித்துக் கொடுத்தார். அதனை கையில் வாங்கிய தரம்வீர், தனது செல்போனை எடுத்து படமெடுத்து ஆடிய பாம்புடன் புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது அந்த பாம்பு, அவரது இடது கையில்கடித்தது. அதிர்ச்சியடைந்த அவர் பாம்பை கீழே போட்டுவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காதர்சவுக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தரம்வீர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காதர்சவுக் இன்ஸ்பெக்டர் அமித் குமார் கூறுகையில், ‘கண்காட்சியில் பாம்பாட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இருந்தும் ஒருவர் பாம்புகளை வைத்து வித்தை காட்டி வந்துள்ளார். விசாரணையில், பாம்பிடம் விஷம் இருக்காது என்று கூறியதால், அந்த பாம்பை தரம்வீர் கையில் வாங்கியுள்ளார். பின்னர் அதனை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட முயன்ற போது பாம்பு கடித்து பலியானார். விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: