ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் போக்குவரத்து போலீசார் மனக்குமுறல்: டார்கெட் கொடுத்தால் நிச்சயம் வழக்குப்பதிய வேண்டி வரும்

பெரம்பூர்: ஒன்றிய அரசால் மாற்றி அமைக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு பொதுமக்களிடம் ஒத்துழைப்பு இல்லாததால் தினம் தினம் அவதிக்குள்ளாகும் போக்குவரத்து போலீசார் ஒருவிதமான மனக் குமுறலுக்கு ஆளாகி வருகின்றனர். ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் பொதுமக்கள் முதலில் அதனை கடுமையாக எதிர்ப்பார்கள். அதன்பின்பு அந்த திட்டத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு, குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். அதுவரை பொதுமக்களுக்கும் அரசு துறை சார்ந்தவர்களுக்கும் இடையே பல்வேறு முட்டல் மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒரு விஷயம். அவ்வாறு சமீபத்தில் அக்டோபர் 28ம்தேதி முதல் ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

ஏற்கனவே, உள்ள அபராத தொகையை மாற்றியமைத்து கூடுதல் அபராத தொகையை விதிமீறல்களில் ஈடுபடுவோர் கட்ட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அதனை ஏற்று தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. இதற்கு ஆரம்பத்தில் எந்த எதிர்ப்பும் காட்டாத பொதுமக்கள் தற்பொழுது தினம் தினம் போக்குவரத்து போலீசாரிடம் தங்களது எதிர்ப்பை கடுமையாக காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களுக்கு பழைய அபராத தொகை 100 ரூபாயில் இருந்து தற்போது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும் சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. 2வது முறை சாலை விதியை பின்பற்றாமல் செல்பவர்கள் 3 மடங்கு அபராதம். அதாவது 1500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தினமும் ஒவ்வொரு சிக்னலிலும் போக்குவரத்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் சண்டையிடுவதும், சில பேர் கெஞ்சி தங்களை விட்டு விடும்படி கூறுவதும். சென்னையில் தினந்தோறும் காணக்கூடிய காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுகுறித்து, சென்னையில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கூறுகையில், ‘‘நான் தினமும் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறேன். கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிக்னல் சரியாக தெரியாததால் கடந்து விட்டேன். இதற்கு எனக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்கள். ஒரு நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டி ஆட்டோ உரிமையாளருக்கு பணம் கட்ட வேண்டும், பெட்ரோல் போட வேண்டும், அதன் பிறகு எனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்நிலையில் போலீசாருக்கு 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றால் அது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாலை விதியை மீறியது எனது தவறுதான் என்றாலும் அபராத தொகை என்பது வாகன ஓட்டிகள் கட்டும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அவர்களை நோகடிக்கும் வகையில் இருக்கக் கூடாது’ என்றார்.மேலும், தினம் தினம் பொதுமக்களின் கோபத்தை சம்பாதிக்கும் வடசென்னை பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர்கள் கூறியதாவது: முன்பெல்லாம் தினமும் இத்தனை ஹெல்மெட் பிடிக்க வேண்டும். இத்தனை டிடி பிடிக்க வேண்டும் என டார்கெட் கொடுப்பார்கள். ஆனால் சமீபகாலமாக எந்தவித டார்கெட்டும் எங்களுக்கு தருவதில்லை. காரணம், பெரிய அளவில் பொதுமக்களிடம் அபராத தொகையை வசூல் செய்ய முடியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணங்களை சொல்கிறார்கள்.

இதில், சிலபேர் கடும் வாக்குவாதம் செய்து அபராத தொகை வசூலிக்கும் போலீசாரை சாபம் விடுகிறார்கள். நாங்கள் அபராத தொகையை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு செல்வது போன்று அவர்களது செயல்பாடுகள் உள்ளன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். மேலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் தெருவுக்கு தெரு சிக்னல் உள்ளது. சாலை சரியில்லாமல் உள்ளது. வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். இதுபோன்ற இடங்களில் நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் அபராத தொகை போன்று சென்னை உட்பகுதியிலும் விதித்தால் கண்டிப்பாக அதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.எனவே, நெடுஞ்சாலை பகுதியில் விதிக்கப்படும் அபராத தொகையை சென்னை உட்பகுதியில் விதிப்பது ஏற்புடையது கிடையாது.

பொதுமக்கள் யாராவது பெரிய அசம்பாவிதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அபராத தொகையை குறைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். தற்போது வரை பெரிய அளவில் உயர் அதிகாரிகள் டார்கெட் என்ற பெயரில் அழுத்தம் தராமல் இருப்பதால் ஓரளவு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் டார்கெட் தர ஆரம்பித்தால் பொதுமக்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிய வேண்டிய சூழ்நிலை வரும். அப்போது, நிறைய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். எனவே, எந்த திட்டம் கொண்டு வந்தாலும், முதலில் எதிர்ப்பு காட்டும் சென்னை வாசிகள் போக்குவரத்து விதிமீறலுக்கு கொண்டு வந்துள்ள புதிய அபராத தொகைக்கு பழக்கப்படுவார்களா அல்லது அதனை எதிர்த்து செயல்படுவார்களா என்பது போகப் போக தெரியும்.

Related Stories: