அரசியல் பேச விரும்பினால் ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்யவேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசியல் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். புதுச்சேரி மாநில அரசு நிர்வாகத்திலும் நேரடியாக தலையிட்டு சூப்பர் முதல்வராக செயல்படுகிறார். அதேபோல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், அம்மாநில அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை வெளியிட்டு பாஜவின் ஏஜென்ட் ஆக செயல்படுகிறார். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, கண்டிக்கத்தக்கது. கவர்னர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும், அதை பொதுவெளியில் பேசுவது அழகல்ல.  கவர்னர் தமிழிசை அரசியல்வாதியாக மாற விரும்பினால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யட்டும்.  

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியிருக்கிறார். இந்த கூட்டத்தில், அரசு பதவியில் இல்லாத பாஜ தலைவர் சாமிநாதனும் பங்கேற்று இருக்கிறார். எல்.முருகன் பதவி ஏற்கும்போது உறுதியேற்ற ரகசிய காப்பு பிரமாணத்தை இதன் மூலமாக மீறி விட்டார்.  புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரங்கசாமி இருந்தாலும் அவர் போட்டுள்ள சட்டை பாஜவுக்கு சொந்தமானது. பாஜவுக்கு முதல்வர் ரங்கசாமி அடிமையாகிவிட்டார்.  புதுச்சேரியில் புதிதாக 6 மதுபான ஆலைகள் தொடங்குவதற்கு ரூ.90 கோடி கையூட்டு பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முதல்வர் ரங்கசாமி பதில் சொல்வாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: