ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிவன்கோயில்களில் அன்னாபிஷேகம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வாலாஜா : வாலாஜாவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகத்தை முன்னிட்டு முதலில் மூலவர் காசிவிஸ்வநாதருக்கு ஐந்து வகைப் பொருட்களால் அபிஷேகம் செய்த பின்பு நன்கு வடித்து வெண்அன்னத்தை கொண்டு லிங்கம் முழுவதும் மூடப்பட்டது. பின்னர் காய்கறி, கனிவகைகள், அப்பளம் வடை உள்ளிட்ட பலகாரங்கள் அதனுடன் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து அன்ன வடிவிலான சிவனுக்கு பஞ்சதீபாராதனையும், வேதபாராயணமும், தேவாரம், திருவாசகம், சிவகண வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.

இதேபோல் இங்குள்ள   ஏகாம்பரநாதர்,  சித்தேஸ்வரர் ராணிப்பேட்டை தேவேந்திரஸ்வரர்  மற்றும் வன்னிவேடு அகஸ்தீஸ்வரர், குடிமல்லூர் பூமிஸ்வரர், திருவந்தீஸ்வரர், அனந்தலை நந்தீஸ்வரர், கைலாசநாதர், முசிறி பூமிஸ்வரர், அம்மூர் ஐராவதீஸ்வரர் உள்ளிட்ட பல கோயில்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதே போல் பிஞ்சி கிராமத்தில் உள்ள தேவேந்திர ஈஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேவேந்திர ஈஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் திரிபுர சுந்தரிக்கு சாகம்பரி (காய்கறிகளால்) அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கீழ்மின்னல் சிவன் கோயிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அழகாம்பிகை சமேத அம்மையப்பர் சுவாமிக்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதேபோல் மேல்விஷாரம் வால்மீகி ஈஸ்வரர் கோயில், வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் ஆகிய சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நேற்று இரவு நடந்தது. அதேபோல் ஆற்காடு தோப்புக்கானா கங்காதர ஈஸ்வரர் கோயிலில் நேற்று இரவு நடந்த விழாவில் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சோளிங்கர்: சோளிங்கரில் உள்ள பழைமை வாய்ந்த கனக குசாம்பாள் உடனுறை சோழ புரீஸ்வரர் கோயிலில்  அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி மூலவர் சோழ புரீஸ்வரர் மற்றும் கனக குசாம்பாள் அம்மனுக்கும் அன்னம், காய்கறி, பழங்களால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அன்னாபிஷேகத்தை தொடர்ந்து சோழபுரீஸ்வரர் மற்றும் கனக குசாம்பாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது.

ரத்தினகிரி: ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோயிலில்  நேற்று இரவு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழா முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

Related Stories: