விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதில் அவர் கூறியதாவது; “126 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும்.” மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும்  98  ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 28 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகள்  உள்ளிட்ட 126 பள்ளிகளுக்கு தேவையான ஆய்வுக்கூட உபகரணங்களை  தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வாங்கி வழங்கிட ஆதிதிராவிடர் நல இயக்குநர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநருக்கு அனுமதி அளித்தும் இதன் பொருட்டு, ரூ.3,15,00,000/- (ரூபாய் மூன்று கோடியே பதினைந்து இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு   வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

(அரசாணை (ப) எண்.214, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந7)துறை, நாள் 19.10.2022). மேற்படி அரசாணையின் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் மாணாக்கரின் பங்களிப்பு அதிகரிப்பதுடன் செயல்முறை தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: