பிரபல மோசடி மன்னன் சுகேஷ் பாஜவில் ஐக்கியமா?: ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பாஜ.வில் சேருகிறாரா? என்று கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் சட்ட விரோத பணபரிமாற்றம் செய்த வழக்கில், இவருடைய வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், ரூ. 4.81 கோடி சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மியில் தனக்கு மாநிலங்களவை எம்பி சீட் தருவதாக கூறியதால், அக்கட்சிக்கு ரூ. 50 கோடி கொடுத்ததாகவும், சிறையில் சொகுசாக வாழ சத்யேந்தர் ஜெயினுக்கு மாதம் ரூ.2 கோடி கொடுத்ததாகவும்  இரட்டை இலை சின்னம் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார். மேலும், தனது கட்சிக்கு தேர்தல் நிதியாக ரூ.500 கோடி திரட்டி கொடுக்கும்படி, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் தன்னை கட்டாயப்படுத்தியதாக நேற்று முன்தினம் டெல்லி ஊடகங்களுக்கு சுகேஷ் கடிதம் எழுதினார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை மறுத்த ஆம் ஆத்மி, ‘சுகேஷ் சந்திரசேகர் பாஜ.வின் நட்சத்திர பிரசாரக்காரர். குஜராத் சட்டப்பேரவை தேர்தல், டெல்லி நகராட்சி தேர்தலுக்கு முன்பாக அவரை சிறையில்  இருந்து விடுவித்து, அவரை கட்சி உறுப்பினராக்க பாஜ திட்டமிட்டுள்ளது,’ என்று கூறினார். இது பற்றி ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி நேற்று கூறுகையில், ‘சத்யேந்தர் ஜெயின் தனது செல்வாக்கை பயன்படுத்தி, மிரட்டி பணம் பறிக்கக்கூடும்  என்பதால் அவரை டெல்லிக்கு வெளியே உள்ள வேறு சிறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் மாற்ற வேண்டும். பாஜ,வில் சுகேஷ் சேர்க்கப்பட மாட்டார்,’ என தெரிவித்தார்.

Related Stories: