தண்ணீர் மாசுபடாமல் காப்பதற்கு கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: தலைமை செயலாளர் உத்தரவு

அம்பத்தூர்: கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 590 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரி நிரம்பி வருகிறது. இந்த ஏரியில் 3 இடங்களில் தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருவதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், கொரட்டூர் ஏரியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலை கழிவு நீர் கலக்கும் ஜீரோ பாயின்ட் பகுதி மற்றும் கழிவு நீர் சேரும் 3 இடங்களை பார்வையிட்டனர்.

ஏரியில் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க, கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். ஆய்வின்போது அம்பத்தூர் எம்.எல்.ஏ.ஜோசப்சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தலைமை பொறியாளர் முரளிதரன், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், அம்பத்தூர் மண்டல ஆணையாளர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் சதீஷ்குமார், கவுன்சிலர் ஜான் உடன் இருந்தனர்.

Related Stories: