தகுதியானவர் நீதிபதியாக வேண்டும் கொலிஜியத்திற்கு தெரிந்தவர் அல்ல: ஒன்றிய சட்ட அமைச்சர் மீண்டும் சர்ச்சை

மும்பை: ‘நீதிபதியாக தகுதியான நபர்களே நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல’ என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மீண்டும் கொலிஜியம் முறையை எதிர்த்து பேசி உள்ளார். நாடு முழுவதும் தற்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கிறது. அவர்களையே அரசு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். இந்த நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பொது வெளியில் வெளிப்படையாக எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில், ஆங்கில பத்திரிகையின் மாநாட்டில் ‘நீதித்துறை சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் பேசிய அவர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் அரசுகள் தான் நீதிபதிகளை நியமிக்கின்றன. ஆனால் இந்தியாவில்தான் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கின்றனர். நான் நீதித்துறையையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கவில்லை. கொலிஜியம் அமைப்பில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. பொதுவாக ஒரு அமைப்பானது பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருந்தால், சம்மந்தப்பட்ட அமைச்சரைத் தவிர வேறு யார் எதிர்த்து பேசுவார்கள்.

நீதித்துறையில் தீவிரமான அரசியல் உள்ளது. தற்போதைய கொலிஜியம் அமைப்பில் பிரச்னை என்னவென்றால், அதில் உள்ள நீதிபதிகள் தங்களுக்கு தெரிந்த நீதிபதிகளைத்தான் பரிந்துரைப்பார்கள். தெரியாதவர்களை பரிந்துரைக்க மாட்டார்கள். பொதுவாக நீதிபதியாக தகுதியானவர்கள் தான் வர வேண்டும். கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல. ஒரு முடிவை எடுக்கும் முன்பாக அரசானது, உளவுத்துறை மற்றும் பல அறிக்கைகளை சரிபார்க்கும். ஆனால் நீதித்துறை அல்லது நீதிபதிகளிடம் அப்படிப்பட்ட நடைமுறை இல்லை. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Related Stories: