சொகுசு பஸ்சில் 500 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது வீட்டில் பதுக்கிய 1.5 டன் குட்கா, ₹20 லட்சம் பறிமுதல்: 8 பேர் கும்பல் அதிரடி கைது

கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு சொகுசு பஸ்சில் கடத்திய 500 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது. கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்பேரில் சூலூரில் வீட்டில் பதுக்கிய 1.5 டன் குட்கா, 20 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று கருமத்தம்பட்டி டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் நீலாம்பூர் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, பெங்களூரில் இருந்து கோவை நோக்கி ஒரு சொகுசு பஸ் வந்தது.

அதை நிறுத்தி பரிசோதித்தபோது பஸ்சின் கீழ் பகுதியில் ரகசிய அறை அமைத்து பேக் செய்து சீலிடப்பட்ட பார்சல்கள் இருந்தன. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததும், பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி கோவைக்கு விற்பனைக்காக கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை கடத்தி வந்ததாக சொகுசு பஸ் டிரைவர் செந்தில்குமார் (47), மெகபூப் பாஷா (30), ஆட்டோ டிரைவர் செந்தில்ராஜா (44) , ஜெயப்பிரகாஷ்(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 500 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்திவர பயன்படுத்திய சொகுசு பஸ், கார்,  ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் பாபூஜி என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில், சுமார் ஒன்றரை டன் எடையுள்ள குட்கா, 2 சொகுசு கார்கள், 2 டூவீலர்கள், ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், பரத் பட்டேல் (26), அமரராம் (22), கோபால் (22), மைபால் (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: