நெல்லையில் இயந்திர நடுவைக்காக நாற்றங்கால் அமைக்கும் சிவகங்கை விவசாயிகள்: செலவு குறைவு, விளைச்சல் அதிகம்

நெல்லை:  தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இதையொட்டி நெல்ைல மாவட்டத்தில் விவசாயிகள் பிசான சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது விவசாய பணிகளுக்கு போதிய பணியாளர்கள் கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கீழநத்தம் கீழுர், மணப்படை வீடு பகுதிகளில் அதிகமாக நெல் பயிர் செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் நடுவை பணிக்காக நெல் விதைக்கும் பணியில் புதிய முறையை கடைபிடித்து வருகின்றனர். இதற்காக சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் பாய்நாற்றங்கல் முறையில் விதைக்கும் பணியில் நெல்லையிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரம் மூலம் நாற்று நடுவதற்கு ஏற்ற வகையில் நாற்றங்காலை தயார் செய்கின்றனர்.

பாய் நாற்றங்கால் செய்வது குறித்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் கூறுகையில்; இயந்திரம் மூலம் நெல் நாற்றங்காலை நடவு செய்ய ஏதுவாக விதைகளை விதைக்க தயார்படுத்த வேண்டும். இம்முறையில் விதைகளை விதைக்கும் நிலம் நல்ல வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் நாற்றங்காலை அமைக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதைகளை விதைக்கலாம். இதற்காக 1 மீட்டர் அகலம், 40 மீட்டர் நீளம், 5 செமீ அளவு கொண்ட மேட்டு பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்திகளின் மீது 300 கேஜ் கனமுள்ள வெள்ளை அல்லது கருப்பு பாலித்தீன் விரிப்பு அல்லது உர சாக்குகளை விரிக்க வேண்டும். 4 செ.மீ உயரத்தில் மரத்திலான விதைப்பு சட்டம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய சட்டத்தினை பாலித்தீன் விரிப்பு மேல் சரிசமாக வைக்க வேண்டும். அந்த சட்டத்தின் உள்பகுதியில் வளமான வயல் மண் கலவையை நிரப்ப வேண்டும். அதன்மேல் விதைநேர்த்தி செய்யப்பட்ட முளைகட்டிய நெல் விதைகளை சட்டத்துக்கு 45 கிராம் அளவில் விதைக்க வேண்டும். பின்னர் விதைகளின் மீது மண்ணை தூவி விட வேண்டும்.

இதைதொடர்ந்து பூ வாளி மூலம் தண்ணீர் அடிப்பகுதிக்கு செல்லும் வரை தெளிக்க வேண்டும். விதைக்கப்பட்ட சட்டத்தின் மீது வைக்கோல், தென்னை ஓலை, சேலை இதில் ஏதாவது ஒன்றை கொண்டு மூடி விட வேண்டும். விதைகள் முளைப்பு வரும் போது வைக்கோல்களை அகற்றிவிட வேண்டும். தினமும் பாத்திகள் நனையும் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 18 நாட்களில் நாற்றுகள் வளர்ந்து நடவுக்கு தயாராகி விடும். சட்டத்தின் வடிவில் காணப்படும் நாற்றுக்களை எடுத்து நாற்று பாவும் இயந்திரத்தில் வைத்து வயல்களில் நடவு செய்யலாம்.  இம்முறையில் நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் கூலியாக வாங்குகிறோம்.

இந்த முறையில் நடவு பணி செய்யும் போது குறைந்த அளவு பணியாளர்கள் போதுமானதாகும். செலவும் குறையும். இயந்திரம் மூலம் நடவு செய்வதால் விளைச்சலும் அதிகம் காணப்படுகிறது. பயிர்களுக்கு தாய்மண் சத்தும் கிடைக்கிறது. ஓரிடத்தில் விதைகளை தூவி மறு இடத்தில் நடவு செய்யும் போது தாய்மண் சத்துக்கள் கிடைப்பதில்லை. இம்முறையில் நெல் பயிர்கள் நடவு செய்யும் போது தாய் மண்ணுடன் நடவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: