தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலை நடத்த தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கடந்த அக்டோபர் 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில், மாவட்ட கிளப் பரிந்துரை செய்யாத வாக்காளர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் பட்டியலில் உள்ளதாக டி.எஸ்.கே.ரெட்டி உள்ளிட்ட பலர் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகாராஜா, ஜோதி குமார், முருகேந்திரன் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “ விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் மட்டுமே தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் மாவட்ட சங்கம் பரிந்துரைக்காத வேறு எந்த நபரும் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியாது. எனவே, விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நியமித்துள்ள நபர்தான் தேர்தலில் வாக்களிக்க முடியும். தேர்தல் அதிகாரி அறிவித்தபடி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தலாம். தேர்தல் இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. வழக்கில் சங்கங்களுக்கான மாவட்ட பதிவாளர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேர்தல் அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்டோர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Related Stories: