வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

திருவள்ளுர்: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

ஆவின் டிலைட் என்ற 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். எந்தவித வேதிப்பொருட்களும் சேர்க்காமல் நவீன தொழில்நுட்ப முறையில் டெலிட் பாலை செயல்படுத்துகின்றோம். சாதாரணமாக தயாரிக்கப்படும் பாலை ஓரிரு நாட்கள் குளிர்விப்பானில் வைத்து பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மேற்பட்ட நாட்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த பாலை 90 நாட்கள் குளிர்விப்பானில் வைக்காமலேயே பயன்படுத்தலாம். எந்தவித கெமிக்கலும் சேர்க்கப்படவில்லை.

வெளிநாட்டிற்கு அனுப்பும் பால் அனைத்தும் சேலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. சுகாதாரத்துக்கு கெடுதல் இல்லை. இப்பாலை பயன்படுத்துவதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இது வியாபார நோக்கத்தோடு செய்யப்படவில்லை. பொதுமக்களின் சேவைக்காக செய்யப்படுகிறது. முதல்வர், இந்தாண்டு பேரிடர் மேலாண்மை கூட்டத்தை கூட்டி முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் வடகிழக்கு பருவமழையால் எந்தவிதமான பாதிப்புகளும் இதுவரை ஏற்படவில்லை. பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை கூட்டத்தை ஒரு மாதத்திற்கு முன்பே கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பேரிடர் காலங்களுக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்களான ஜேசிபி இயந்திரம், மணல் மூட்டைகள், பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், மரம் அறுக்கும் கருவி, நீர் இறைக்கும் மோட்டார், மின் கம்பங்கள், டார்ச் லைட் போன்ற அனைத்தும் தேவைக்கேற்ப தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழை காலங்களில் எத்தகைய பேரிடர்களையும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், எஸ்பி சீபாஸ் கல்யாண், எம்எல்ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ச.சந்திரன், திருவள்ளூர் சப்-கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, வட்டாட்சியர் என்.மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: