மதுரை அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சையால் சர்க்கரை நோய்க்கு தீர்வு

*நோயாளிகளுக்கு முதலில் முறையான கவுன்சிலிங் தரப்படுது

*யோகா தெரபியால் குணமடைவோர் எண்ணிக்கை கூடுது

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்வியல் பிரிவு துறையில் யோகா தெரபி மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் அறிவியல் ரீதியாக நிரூபணமான நிலையில், முற்றிலும் பக்க விளைவுகள் அற்ற இச்சிகிச்சையை தொடர்ச்சியாக முறையாக பின்பற்றுவதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவை தற்போது மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் உணவு முறை தான். சர்க்கரை வியாதியானது ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் பாதிக்க கூடியதாக உள்ளது. இதற்கு அதிகப்படியான அரிசி உணவு எடுத்து கொள்வதும், போதிய உடல் உழைப்பு இல்லாமல் போனதும் காரணமாகிறது. 3 வேளையும் அரிசி உணவுகளை அதிகமாக எடுக்கும் போது கலோரிகளை கரைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.

இனிப்பு பலகாரங்கள், சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளை சாப்பிடும் போது தான் சர்க்கரை வியாதி வரும் என்ற எண்ணம் தவறானது. அரிசி உணவும் இனிப்பு தான். அரிசி உணவு அதிகமாக சாப்பிடும் போது கார்போஹரேட் சேர்ந்து கொழுப்பாக மாறுகையில் செரிமானம் ஆவதற்கு அதிகப்படியான இன்சுலின் தேவைப்பட்டு, சர்க்கரை வியாதிக்கு வழிவகுக்கிறது. தேவை அதிகமாகும் போது இன்சுலின் கடன் வாங்கப்படுகிறது.

மதுரை அரசு மருத்தவமனையில் செயல்பட்டு வரும் இயற்கை மருத்துவ பிரிவில் சர்க்கரை நோயாளிகள் அதிகளவில் சிகிச்சைக்கு வரத்துவங்கியுள்ளனர். இங்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் கவுன்சிலிங் தரப்படுகிறது. அரிசி உணவை குறைத்து சிறுதானிய உணவுகளை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஸ்டால்கள் அமைத்து சிறுதானிய வகைகளை காட்சிப்படுத்தி உணவு முறையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. பொதுவாக சர்க்கரை நோயாளிகள், உணவு எடுத்து கொண்டால் தானே சர்க்கரை அளவு கூடும் என்று நினைத்து பக்குவமாக பட்டினி கிடக்கிறார்கள். பட்டினி கிடந்தால் போதும் சர்க்கரை குணமாகி விடும் என்பது தவறாகும். இதனால் உடம்பு மெலிந்து, மூட்டு வலி, கால் வலி என கஷ்டப்படுவர். உணவு சாப்பிடும் முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

தவிர்க்க, சேர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது: காலை உணவாக அவல், இட்லி, இடியாப்பம், புட்டு, சிறுதானிய உணவுகள். முளைகட்டிய பச்சைபயறு, உளுந்து, எள்ளு, நிலக்கடலை, கருப்பு கொண்டை கடலை, ஆவாரம் பூ டீ, நாவல் பழக்கொட்டை பொடி, வெந்தய நீர் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவாக கைக்குத்தல் அரிசி சாதம் அல்லது கஞ்சி, வேக வைத்த காய்கறிகள், கீரைகள். இரவு உணவு: சிறுதானிய உணவுகள், இட்லி, அவல், இடியாப்பம், புட்டு.(பசித்தால் மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்). காய்கறி கலவை: கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், முட்டைக்கோஸ், கொத்தவரங்காய், வெள்ளரி, வெண்டைக்காய், கோவைக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், சீரகத்தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி இலை.

பழ கலவையாக பப்பாளி காயாக எடுத்து கொள்ள வேண்டும். தர்பூசணி, கருப்பு திராட்சை விதையுள்ளது. வெந்தய நீர், கொய்யா இலையை கொதிக்க வைத்து வடிகட்டிய நீர் பருகலாம். ஆரஞ்சு, அன்னாசி, சாத்துக்குடி பழங்கள் சாப்பிடலாம். சாறு வகைகளாக பாகற்காய் சாறு 60 மில்லி(காலை) வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். 10 துளசி இலை, 10 வில்வ இலை, 10 மூக்கிரட்டை இலை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். கற்றாழை ஒரு துண்டு, இஞ்சி ஒரு துண்டு, 15 கருவேப்பிலையை இடித்து கொதிக்க வைத்து குடிக்கலாம். 4 மாதுளை பழ சாறுடன் சிறு இஞ்சி துண்டு சாறு கலந்து குடிக்கலாம்.

சுரைக்காய் ஒரு துண்டு, கொத்தமல்லி இலை கைப்பிடி, 15 புதினா இலையுடன் லேசாக கொதிக்க வைத்து குடிக்கலாம். அசைவம், டீ, காபி, பால் மற்றும் பால் பொருட்கள். உப்பு, சீனி, புளி. ரவை, மைதா, கோதுமை, தீட்டப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள். பேக்கரி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவுகள். செயற்கை குளிர்பானங்கள், ரீபைண்ட் எண்ணெய், மா, பலா, வாழை, சீத்தா, சப்போட்டா பழ வகைகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை நோய்க்கு ஆசனங்கள்

* நின்ற நிலையில் செய்யக் கூடிய ஆசனங்கள்- அர்த்த சங்கராபரணம், பாதஹஸ்தாசனம், அர்த்த சக்ராசனம், பரிவர்த திரிகோணாசனம்.

* அமர்ந்த நிலையில் செய்யும் ஆசனங்கள்- ஜானு சிரசாசனம், பச்சிமோட்டானாசனம், வக்ராசானம், அர்த்த மஸ்தேயேந்தராசனம்.

* படுத்த நிலையிலான ஆசனங்கள்- பவன முக்தாசனம், நவுக்காசனம், பாசனம், ஹலாசனம், தனுராசனம், புஜங்காசனம்.

* முத்திரை பயிற்சி: அபானமுத்திரை. பலன்கள்: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், கணையத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி வலு பெறச் செய்யும், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

யோகா சிகிச்சையும் உண்டு

மதுரை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவம் மற்றும் மருத்துவ வாழ்வியல் பிரிவு துறை டாக்டர் நாகராணி நாச்சியார் கூறும்போது, ‘‘மதுரை அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவ பிரிவில் சர்க்கரை நோயாளிகளுக்கு யோகா சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடைபயிற்சி, உடற்பயிற்சியும் செய்கிறார்கள்.

அதனால் கலோரிகள் கரைக்கப்பட்டு இன்சுலின் தேவையும் குறைகிறது. சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்பிரிவில் தினமும் சராசரியாக 80 சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் மற்ற வார்டுகளின் நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் மருத்துவ சிகிச்சையுடன், யோகா சிகிச்சைகளும் தரப்படுகிறது’’ என்றார்.

Related Stories: