இந்திய தேர்தல்களில் வெளிநாடு வாழ், புலம் பெயர் இந்தியர் வாக்களிக்க அனுமதி; உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி:‘இந்திய தேர்தல்களில் வெளிநாடுகளில் வாழும் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் வாக்களிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்,’என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், புலம் பெயர்ந்த இந்தியர்களும் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரும் பிரதான வழக்கும், தமிழக வழக்கறிஞர் ஹரீஷ் குமார் தொடர்ந்த இடைக்கால வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், பதிலி வாக்களிப்புக்கு வகை செய்யும் மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்கள் வசிக்கும் நாடுகளிலும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் வாக்களிக்க ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட வேண்டும்,’என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ரமணி, ‘வெளிநாடு வாழ், புலம்பெயர் இந்தியர்களை வாக்களிக்க அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் அது நடைமுறைக்கு வரும்,’என தெரிவித்தார். இதை ஏற்ற தலைமை நீதிபதி லலித்,‘தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை,’என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: