பரிதாபாத்: பரிதாபாத் அருகே நள்ளிரவில் வீடு திரும்ப வாகனத்திற்காக காத்திருந்த இளம்பெண்ணை, கடத்திச் சென்று ஓடும் வேனில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் செக்டர் 23 பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய பெண், கடந்த 29ம் தேதி தனது தோழியை சந்தித்துவிட்டு கல்யாண்புரி சவுக் பகுதிக்கு செல்ல மெட்ரோ சவுக் அருகே வாகனத்திற்காக காத்திருந்தார். நள்ளிரவு நேரம் என்பதாலும், கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவியதாலும் பேருந்துகள் கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனில் டிரைவர் உட்பட 2 பேர் இருந்துள்ளனர். அந்தப் பெண் அவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு வேனில் ஏறியுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான அப்பெண்ணை ஏற்றிக்கொண்ட அந்த கும்பல், அவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விடாமல் குருகிராம் – பரிதாபாத் சாலைக்கு வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டபோதும், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதிக்கு வாகனத்தை கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணை சிறைபிடித்த அந்த கும்பல், சுமார் 3 மணி நேரம் ஓடும் வாகனத்திலேயே மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வெறியாட்டம் முடிந்ததும், நேற்று அதிகாலை 3 மணி முதல் 4 மணியளவில் எஸ்.ஜி.எம். நகர் ராஜா சவுக் அருகே ஓடும் வேனில் இருந்து அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், ரத்த வெள்ளத்தில் தனது சகோதரியை தொடர்பு கொண்டு கதறியழுதுள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முகத்தில் 12 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கோட்வாலி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டபோதும், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதிக்கு வாகனத்தை கொண்டு சென்றுள்ளனர்.
