இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; உச்ச நீதிமன்றத்தில் திமுக கேள்வி

புதுடெல்லி: இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காமல் இருப்பது ஏன் என்று திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. ஒன்றிய  அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது. குறிப்பாக  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள் போன்ற முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 28ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதில், ‘குஜராத், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்’ என்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக முஸ்லீம் லீக், திமுக, விடுதலை சிறுத்தை  ஆகிய கட்சிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஏற்கெனவே நடந்த வழக்கு விசாரணையில் அந்த சட்டத்துக்கான விதிகள் உருவாக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு கூறியது. இப்போது, முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டமே இல்லாமல் அகதிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமே குடியுரிமை வழங்கப்படும். எனவே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு முடியும் வரை அகதிகளுக்கு அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது. மேலும் இந்த மறைமுக நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் உள்ள 232 மனுக்களில் அசாம் மற்றும் திரிபுரா தொடர்பாக 53 வழக்குகள் உள்ளன. அதற்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்’’என கோரிக்கை வைத்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயத்து அரசு பதிலளிக்க உத்தரவிட வேண்டும். இது முக்கியமான அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட வழக்கு’’என வாதிட்டார்.

திமுக தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வில்சன், குமணன், ‘‘இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வந்த இலங்கைத் தமிழர்கள் குறித்து  ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என புரியவில்லை. அதனால் நீதிமன்றம் அதனையும் கருத்தில் கொண்டு அந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’என்றனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பும் வழக்கின் சுருக்க வாதங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் வாதங்களை தொகுத்து தாக்கல் செய்ய பல்லவி பிரதாப், கனு அகர்வால் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களை நியமிக்கிறோம்’ என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: