பொருள் ஈட்டுவது மட்டும் குறிக்கோளாக இல்லாமல் நாடு முன்னேற மாணவர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

சென்னை: பணம், பொருள் ஈட்டுவது மட்டும் குறிக்கோளாக இல்லாமல், நாட்டு முன்னேற்றத்திற்காக மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில், பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி-20 கனவு திட்டம் புத்தகத்தை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, துணை தலைவர் டால்பின் தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் பேசியதாவது: பிரதமர் மோடி 20 ஆண்டுகள் அரசியலில் பெரும் சாதனைகள் புரிந்து உள்ளார். குஜராத்தின் முதல்வராகவும், நாட்டில் பிரதமராக இரண்டு முறையும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். அவரது சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் நாட்டு மக்களுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்குவதற்காக பாடுபட்டு வருகிறார். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்க அரசுக்கு உறுதுணையாக பாடுபட வேண்டும். அதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சி அடையும். கல்வி கற்பதன் நோக்கம் ஆராய்ச்சி என்ற குறிக்கோளாக இருக்க வேண்டும். பணம், பொருள் ஈட்டுவது மட்டும் குறிக்கோளாக கூடாது என்றார்.

Related Stories: