ஸ்டேஷனில் பெண் மீது தாக்குதல் சென்னையில் வசிக்கும் மாஜி ஏடிஎஸ்பி பெண் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை: தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே விசாரணைக்காக பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய மாஜி ஏடிஎஸ்பி மற்றும் பெண் இன்ஸ்பெக்டருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த கணபதி மனைவி பாப்பா (49). கணபதி இறந்து விட்டார். கடந்த 2.11.2007 அன்று அந்த பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் விமல்காந்த், எஸ்ஐ காந்திமதி ஆகியோர் காசிலிங்கபுரத்துக்கு சென்று உள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த பாப்பா வீட்டுக்குள் நுழைந்த போலீசார், வீட்டை சேதப்படுத்தி பாப்பாவையும் தாக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திலும் பாப்பாவை தாக்கி உள்ளனர். இதில் அவரது 2 கைகளிலும் விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து திரண்டு சென்ற ஊர் மக்கள், பாப்பாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர், 22 நாட்கள் சிகிச்சையில் இருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்போதைய சப்-கலெக்டர் நடத்திய விசாரணையில், பாப்பாவை போலீசார் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இந்த நிலையில் பாப்பா, நெல்லை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. அதேவேளை இன்ஸ்பெக்டர் விமல்காந்த், ஏடிஎஸ்பி பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் சென்னையில் வசித்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்திமதி, பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதனிடையே இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட மாஜி ஏடிஎஸ்பி விமல்காந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: