கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தமிழ்நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு களைய வேண்டும்-பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தமிழ்நகர் பகுதியில் நிலவி சுகாதார சீர்கேட்டினை விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் திருச்சி சாலையில் காந்திகிராமத்தை தாண்டியதும் இடதுபுறம் தமிழ் நகர் பகுதி உள்ளது. திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.

மூன்று குடியிருப்புகளில் 96 குடும்பங்கள் உள்ளன. இதில், ஒரு குடியிருப்பு முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதியின்றி இந்த பகுதியினர் நாள்தோறும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று குடியிருப்புகளுக்கும் ஒரே செப்டங் டேங்க் உள்ளது எனவும், என்றாவது ஒரு நாள் மாநகராட்சி சார்பில் வாகனம் வரவழைக்கப்பட்டு, கழிவு நீர் பம்பிங் செய்யப்பட்டு எடுத்துச் செல்ல படுகிறது எனவும் கூறப்படுகிறது. மற்ற சமயங்களில் செப்டிங் டேங்க் நிரம்பி குடியிருப்புகளை சுற்றிலும் உள்ள சாக்கடை வடிகால்கள் நிரம்பி கடும் துர்நாற்றம், கொசுக்கள் தொல்லை இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளால் இந்த பகுதியினர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. செப்டிங் டேங்க் அவ்வப்போது நிரம்பிய சமயங்களில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து இந்த பகுதியினர் மேம்பாட்டு வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில், குழாயுடன் கூடிய ஒரு மோட்டார் வாங்கித் தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் கழிவுநீர் அனைத்தும் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியிலேயே வெளியேற்றப்படுகிறது.மேலும், குடியிருப்பை ஒட்டி, பள்ளம் தோண்டி, கழிவுகள் உள்ளே விடப்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது எனவும் இதன் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் அனைவரும் மிகுந்த அச்சத்திலும் உள்ளனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிடவும் இந்த பகுதியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பகுதியினர்களுக்கு அடிப்படை வசதிகளில் முக்கிய தேவையான குடிநீர் வசதியும் சீராக இல்லை. தண்ணீர் தேவைக்காக வெளியே சென்றுதான் தண்ணீர் பிடித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

எனவே, செப்டிங் டேங்கில் இருந்து குழாய் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் குடியிருப்பின் அருகிலேயே விடாமல், வெகுதுரம் சென்று வேறு பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சீரான முறையில் பகுதியினர்களுக்கு குடிநீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தமிழ்நகர் பகுதியை பார்வையிட்டு மக்கள் நலன் கருதி, விரைவில் துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை மனதில் வைத்து தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் இவர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: