ஆற்காட்டில் வீட்டில் பதுக்கிய பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் சிக்கினர்

ஆற்காடு: ஆற்காட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் மற்றும் வெள்ளியிலான 6 சிலைகளை போலீசார் இன்று மீட்டனர். இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐம்பொன் சிலைகள் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள பாலாஜி (39) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் சுமார் 1 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன முருகர் சிலை, காளி, மாரியம்மன், லட்சுமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளியால் ஆன 2 விநாயகர் சிலைகளையும் போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாலாஜி மற்றும் காட்பாடி பாலாஜி நகர் 2வது தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (34), ஆற்காடு அம்மன் நகர் கன்னிக்கோயில் தெருவை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (24) ஆகிய 3 பேரை பிடித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அந்த சிலைகள் கோயிலில் இருந்து திருடப்பட்டதா, அல்லது வேறு எங்கிருந்து கடத்தப்பட்டது? சிலை கடத்தல் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீட்டில் ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: