ரகசிய அறையில் பதுக்கி வைத்த 3 சோழர் கால சிலைகள் மீட்பு

சென்னை: நாகை பகுதியில் உள்ள பன்னகா பரமேஸ்வரி கோயிலில் ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 3 பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் திருக்குவளை அருகே சோழர் காலத்தில் கட்டப்பட்ட பன்னகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 11 பழங்கால சிலைகள், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் பன்னகா கோயில் பகுதியில் சிலைகள் பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் கோயில் வளாகத்தில் உள்ள ரகசிய அறையில் ஒரு அலமாரி இருப்பதை கண்டுபிடித்தனர். பிறகு அலமாரியின் பூட்டை உடைத்து பார்த்த போது, அதற்குள் வள்ளி, புவனேஸ்வரி, திருஞான சம்பந்தர் சிலைகள் இருந்தன. மீட்கப்பட்ட சிலைகள் குறித்து கோயில் பதிவேடுகளை சரிபார்த்த போது, எதிலும், மீட்கப்பட்ட சிலைகள் பற்றி குறிப்பிடவில்லை. இதனால், 3 சிலைகளின் தொன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், இந்த 3 சிலைகளும் 12 முதல் 15ம் நூற்றாண்டின் சோழர் காலத்தை சேர்ந்த உயர் மதிப்புடையவை என தெரியவந்தது. எனவே,சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது, அவற்றின் பழமை எப்படி, கோயிலுக்கு எப்படி வந்தது என்பது குறித்து  இன்ஸ்பெக்டர் இந்திரகுமாரி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: