பாஜ.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர்: பிரதமருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

புதுடெல்லி: புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி, விநாயகர் உருவங்களை பொறிக்க வேண்டும் என பிரதமருக்கு டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் கோரியுள்ளார். டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் இமாச்சல பிரதேசம், குஜராத்தில் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால்,  இந்த மாநிலங்களில் இக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, பாஜ.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், `புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபக்கம் மகாத்மா காந்தியின் படத்தையும், மறுபக்கம் இந்திய கடவுள்களான லட்சுமி தேவி, விநாயகரின் படங்களை பிரதமர் மோடி சேர்க்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய முயற்சிகளுக்கு பலன் இருக்காது,’ என தெரிவித்தார். பாஜ தனது இந்துத்துவ கொள்கை மூலம் இந்துக்களின் வாக்குகளை பெற்று வருகிறது. அதை தடுக்கும் வகையிலும், பாஜ.வின் வாக்குகளை பிரிக்கவும் கெஜ்ரிவால் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். இதன்மூலம், பாஜ. வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். ‘இந்துக்களின் வாக்குகளை பெறவே, கெஜ்ரிவால் இப்படி கூறியுள்ளார்,’ என பாஜ குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories: