திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசித்து விரதம் துவங்கினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரங்களில் வீரவாள் வகுப்பு, வேல்வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியம் முழங்க சண்முகவிலாசம் வந்து சேர்ந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. 7.30 மணிக்குமேல் தங்கதேரில் சுவாமி ஜெயந்திநாதர் கிரி வீதியுலா வந்து கோயில் சேர்ந்தார். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதமிருக்கும் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று விரதம் தொடங்கினர். அதிகாலையில் பக்தர்கள் ஏராளமானோர் கடலில் நீராடி கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம், வருகிற 30ம் தேதி நடக்கிறது.

அன்று மாலை கடற்கரையில் சூரனை முருகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 31ம் தேதி இரவில் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.  சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பட்டுசாத்தி நடை சாத்தப்பட்டது. மாலை 6.45க்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜை தொடர்து நடைபெற்றது.

பழநியில்: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை 11.30 மணிக்கு மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் கல்ப பூஜை நடந்தது. தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு உச்சிகாலத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

Related Stories: