யார் இந்த ரிஷி சுனக்

ரிஷி சுனக்கின் தாத்தா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராம்தாஸ் சுனக். இவர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிளார்க்காக பணியாற்றினார். பின்னர், 1935ம் ஆண்டு கிழக்கு ஆப்ரிக்காவுக்கு சென்றார். 1937ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த சுஹாக் ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் யஷ்வீர் சுனக். இவரது மனைவி உஷா  சுனக். இவர்கள் 1960ம் ஆண்டு கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். உஷா ஒரு மருந்தாளுனர். யஷ்வீர் மருத்துவர். இவர்களுக்கு 1980ம் ஆண்டு மே 12ம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்தவர்தான் ரிஷி சுனக். ரிஷி சுனக் உலக புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம், முதுநிலை வர்த்தக மேலாண்மையை படித்தார். ஸ்டான்போர்டு பல்கலை.யில் படிக்கும் போதுதான் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, அவரது மகள் அக்‌ஷதா மூர்த்தியை சந்தித்தார்.   

2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றினார் சுனக். 2009ல் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் நிறுவனம் ஒன்றில் 2013 முதல் 2015ம் ஆண்டு வரை சுனக் பணியாற்றினார். 2015ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அப்போது, அவரது கையில் பகவத் கீதை புத்தகத்தை வைத்திருந்தார்.

படிப்படியாக வளர்ந்த அவர் அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிப் பெற்று, தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அமைச்சரவையில் இளநிலை அமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் இளநிலை  அமைச்சராக பணியாற்றினார். 2020ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்தார். கொரோனா காலத்தில் நிதியமைச்சராக இருந்து பொருளாதாரத்தை திறம்பட கவனித்ததால் அனைவரது கவனத்தையும் பெற்றார். இதனால், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் போது, இவரை பிரதமர் பதவிக்கான போட்டி வரை கொண்டு சென்றது.

பின்னர், பிரதமருக்கான தேர்தலில் நின்றார். முதலில் ரிஷி சுனக்கிற்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், இறுதியில் மங்கியது. இதனால் கைக்கு எட்டியது வாய் எட்டாமல் போனது. ஆனால், இரண்டே மாதங்களில் மீண்டும் பிரதமர் பதவி கைக்கூடி வந்தது. இந்த முறை போட்டி இருந்த போதிலும், பெரும்பான்மை எம்பி.க்களின் ஆதரவு சுனக்குக்கே இருந்ததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுனக்கின் வெற்றி உலக வரலாற்றில் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகள் இங்கிலாந்தில் வரலாற்றில் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சுனக் பயோடேட்டா

பிறந்தது    மே 12, 1980

பிறந்த இடம்    சவுதாம்ப்டன், இங்கிலாந்து

படிப்பு    பிஏ, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், எம்பிஏ, ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகம்

தனிப்பட்ட வாழ்க்கை    இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்தின் பணக்கார தம்பதி.

மொத்த சொத்து     ரூ.5,960.45 கோடி.

* இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சவாளி பிரதமர்

* உயர் பதவியை வகிக்கும் முதல் இந்து.

* இங்கிலாந்தின் முதல் ஆசிய வம்சாவளி பிரதமர்.

4 மாதத்தில் 3வது பிரதமர்

* இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* 56வது பிரதமராக லிஸ் டிரஸ் கடந்த செப். 6ம் தேதி பதவியேற்றார். 50 நாட்கள் பதவி வகித்த இவர், நேற்று சார்லஸ் 3ம் மன்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

* 57வது பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனக் நேற்று பதவியேற்று கொண்டார்.

* மன்னரை விட பணக்காரர்

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்ட ரிஷி சுனக், இங்கிலாந்தின் பணக்கார தம்பதியாக உள்ளனர்.  இவர்களுடைய சொத்து மதிப்பு ரூ.5,960.45 கோடி என கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலும் நாராயண மூர்த்தி தனது மகளான அக்‌ஷதாவுக்கு வழங்கிய சொத்துகள்தான். இங்கிலாந்த்தில் பணக்கார எம்பி.க்களில் ஒருவராக கருதப்படும் சுனக், இதுவரை தனது சொத்து மதிப்பை வெளியிடவில்லை. தற்போது உள்ள சொத்து மதிப்பே மன்னரின் சொத்து மதிப்பை விட அதிகம். ரிஷியும் தனது சொத்து மதிப்பை வெளியிட்டால், உலகமே அதிர்ச்சிக்குள்ளாகும் என்பதில் ஆச்சரியமில்லை. கடந்த ஏப்ரல் 2022ல் அக்‌ஷதாவுக்கு இங்கிலாந்து குடியுரிமை இல்லாததால், இன்போசிஸ் வருமானத்திற்காக இங்கிலாந்துக்கு வரி செலுத்தவில்லை என சர்ச்சையானது. இதேபோல், சுனக் அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருந்தது சர்ச்சையானது.

* இளம் வயது பிரதமர்

ஆண்டு    வயது    பெயர்

1783    24    இளையபிட்

1812    42    ராபர்ட் பேங்க்ஸ்

1997    43    டோனி பிளேர்

2010    43    டேவிட் கேமரூன்

2022    42    ரிஷி சுனக்

* சுனக் எங்கள் நாட்டுக்காரர் உரிமை கொண்டாடும் பாக்.

ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸ் பிறந்த இடம் குஜ்ரன்வாலா. இது, தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. ராம்தாஸ் சுனக், குஜ்ரன்வாலாவை விட்டு 1935ல் நைரோபியில் எழுத்தராக பணியாற்றினார். ராம்தாஸின்  மனைவி சுஹாக் ராணி சுனக் 1937ல் கென்யாவுக்குச் செல்வதற்கு முன்பு  குஜ்ரன்வாலாவில் இருந்து தனது மாமியாருடன் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். சுனக் பற்றி பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை  என்றாலும், சமூக ஊடகங்களில் சிலர் அவர் மீது உரிமை கோருமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். இதனால், ரிஷி சுனக் இந்தியரா மற்றும் பாகிஸ்தானியரா என்ற பேச்சு பரவலாகி வருகிறது.

* தாத்தா கட்டிய கோயிலில் அன்னதானம்

சவுதாம்ப்டனில் உள்ள வேதிக் சொசைட்டி இந்து ஆலயம், ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸ் சுனக்கால் 1971ல் நிறுவப்பட்டது. அவரது தந்தை யஷ்வீர் 1980 ஆண்டுகளில் இதில் அறங்காவலராக தனது பணியை தொடர்ந்தார் என்று தி இன்டிபென்டன்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த கோயிலுக்கு ரிஷி சுனக் தவறாமல் சென்று வருகிறார். கடைசியாக ஜூலை மாதம் இந்த கோயிலுக்கு சென்று அன்னதானம் செய்தார். தற்போது இந்த கோயிலின் தலைவராக உள்ள சந்தரானா கூறுகையில், ‘இங்கிலாந்தை பொறுத்தவரை, இது பராக் ஒபாமாவின் தருணம். இது, அனைவருக்கும் மிகவும் பெருமையாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

* 75வது சுதந்திர ஆண்டில் அடுத்தடுத்து பெருமை

இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் (இங்கிலாந்து) கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர். அப்போது, இந்தியர்களை சொல்ல முடியாத சித்ரவதை, கொடுமைகளை செய்த ஆங்கிலேயர்கள், நம் நாட்டின் அனைத்து வளத்தையும் சுரண்டி எடுத்து அவர்களின் நாட்டிற்கு கொண்டு சென்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டுகள் முடிந்து கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை தற்போது இந்தியரான சுனக் ஆள போவது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் இருக்கிறார். இதுபோல், இன்னும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் அரசியல் பதவிகளில் கோலோச்சி வருகின்றனர்.

* சோனியா பிரச்னையை கிளப்பி பாஜ.வுடன் எதிர்க்கட்சிகள் மோதல்

இந்தியாவின் பிரதமராக சோனியா பதவியேற்பதற்கு, அவர் இத்தாலியை சேர்ந்தவர் என்ற காரணத்தை கூறி பாஜ எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது, இங்கிலாந்தில் சுனக் பிரதமராகி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், ‘இந்தியாவிலும் ஒருநாள் உயர் பதவிக்கு சிறுபான்மையினரைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தியாவும், பெரும்பான்மை வாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் (பாஜ) சுனக்கின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளனர்.

தித்திக்கும் தீபாவளி

* கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்தாண்டுதான் இந்தியாவில் தீபாவளி மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.

* தீபாவளிக்கு முந்தைய நாளில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடனான போட்டியில்,  இதுவரை இல்லாத த்ரில் வெற்றியை இந்தியா ருசித்தது. இதை இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி வருகிறது.

* இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தில் சுனக்கால் எழுதப்பட்ட வரலாற்று வெற்றியும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தித்திக்கும் தீபாவளியாக மாற்றியுள்ளது.

* பெங்களூரு மருமகன்

நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவருடைய மகள் அக்‌ஷதாவை சுனக் மணந்திருப்பதால், ‘பெங்களூருவின் மருமகன்’ என்று அவர் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர், அடிக்கடி பெங்களூருவுக்கு குடும்பத்துடன் வந்து செல்வார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை தனது இல்லத்தில் கொண்டாடுவார். அவர் இங்கிலாந்து பிரதமராகி இருப்பதை, பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

காத்திருக்கும் சவால்கள்

* அதிக பணவீக்கம், உயரும் வட்டி விகிதங்களால் இங்கிலாந்து பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டு உள்ளது.

* இங்கிலாந்தில் உக்ரைன் போரால் இந்தாண்டு 2வது முறையாக எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

* நாணயச் சந்தைகளில் டாலருக்கு நிகரான பவுண்டு மதிப்பு சரிந்துள்ளது.

* சுனக்கின் முதல் பணி, சரிந்து வரும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதுதான்.

புதிய சாதனை

* இங்கிலாந்தில் இதுவரை 56 பிரதமர்கள் பதவி வகித்து உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஸ்காட்லாந்து, அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள்.

* இந்த 2 நாடுகளும் இங்கிலாந்தின் அங்கமாக உள்ளன. அதனால் இவர்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது.

* 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேறு நாடுகளை சேர்ந்த வம்சாவளியினர், இங்கிலாந்தில் பிரதமராகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதை உடைத்து சாதனை படைத்துள்ளார் சுனக்.

Related Stories: