ஏக்நாத் ஷிண்டே மீதான அதிருப்தியால் 22 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஓடுவார்கள்: சிவசேனா பத்திரிகையில் பரபரப்பு தகவல்

மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீதான அதிருப்தியில் அவரது அணியில் இருக்கும் 22 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய உள்ளதாக சிவசேனா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையில், ‘ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இருக்கும் 40 சிவசேனா எம்எல்ஏக்களில் 22 பேர் விரைவில் பாஜகவில் சேரவுள்ளனர். அவர்கள் ஏக்நாத் ஷிண்டே மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவியானது, பாஜகவின் தற்காலிக ஏற்பாடு ஆகும்.

தங்களது முதல்வர் சீருடை எப்போது வேண்டுமானாலும் கழற்றப்படும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும்; ஆனால் பாஜக அதைத் தவிர்த்தது. மகாராஷ்டிரா பஞ்சாயத்து தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணி வெற்றிப் பெற்றதாக கூறுவது தவறானது. ஏக்நாத் ஷிண்டேவை, பாஜக தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தி வருகிறது. மாநில அரசின் அனைத்து முடிவுகளையும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் எடுக்கிறார். அந்த முடிவுகளை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிக்கிறார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: