இது சரியில்லை... வாசிம் அக்ரம் ஆவேசம்

பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கருத்துக்கு பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டனும் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதில் இந்தியா மூக்கை நுழைத்து ஆதிக்கம் செலுத்தக் கூடாது. கடந்த 10-15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் அதிக அளவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்காத நிலையில், இப்போது தான் ஒவ்வொரு அணியாக வந்து விளையாடத் தொடங்கி இருக்கின்றன.

நான் ஒரு கிரிக்கெட் வீரன் தான். அரசியலில் என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஆனாலும், இரு நாட்டு மக்களிடையே நல்லுறவும் புரிதலும் தேவை என்பது மிக முக்கியம். ஜெய் ஷா தனது கருத்தை தெரிவிப்பதற்கு முன்பாக பாக். கிரிக்கெட் வாரியத் தலைவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை கூட்டி ஆலோனை நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் என அறிவித்தது பொறுப்பற்ற செயலாகும். ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தான் எங்களுக்கு அளித்தது. அப்படி இருக்கும்போது ஜெய் ஷாவின் அறிவிப்பு கொஞ்சமும் நியாயம் இல்லாதது. இவ்வாறு அக்ரம் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானும், ஜெய் ஷா அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: