கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதிய இணைப்பு கட்டிடம் 2024ல் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக விபத்து விழிப்புணர்வு தின உறுதிமொழியேற்று, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் செயல்பாடு விளக்கும் நிகழ்ச்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, அண்ணாநகர் எம்எல்ஏ மோகன், சென்னை பெருநகர மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சரவணன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை இணைப்பு கட்டிடம் ரூ.309 கோடி மதிப்பீட்டில் 2.8 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு 2024 மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1973ம் ஆண்டு 73 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு துவங்கப்பட்டது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். நோயாளிகள் முதலில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் தீக்காயப் பிரிவிற்கு மாற்றப்படுகிறார்கள். சீரான காற்றோட்ட வசதியுடன் கூடிய வார்டும், அறுவை அரங்கும் உள்ளன. தீபாவளி பட்டாசு விபத்தினால் ஏற்பட்ட தீக்காயத்திற்கு 2019ல் 55 நோயாளிகளும், 2020ல் 15 நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். 2021ல் 22 பேர் புறநோயாளிகளாகவும், 6 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: