கோபி அருகே பணம் இரட்டிப்பு மோசடி கும்பலிடம் ரூ.1.50 லட்சத்தை பறிகொடுத்த தாய், மகன்-கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்

கோபி : கோபி அருகே பணம் இரட்டிப்பு மோசடி கும்பலிடம் ரூ.1.50 லட்சத்தை பறிகொடுத்த தாயும், மகனும் மர்ம நபர்கள் வழிப்பறி செய்ததாக நாடகமாடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோபி அருகே அயலூர் மல்லிபாளையம் அத்திமரத்துகாட்டை சேர்ந்தவர் ராமசாமி மகன் கோபாலகிருஷ்ணன் (24). இவர் கோபியில் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று கோபாலகிருஷ்ணனும், அவரது தாய் ருக்மணியும், கோபியில் உள்ள வங்கி ஒன்றில் நகையை அடமானம் வைத்து ரூ.1.50 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்ததாகவும், சலங்கபாளையம் அருகே டூவீலர்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வழிமறித்து, ரூ.1.50 லட்சம் ரூபாயை பறித்து கொண்டு தப்பியதாகவும் கோபாலகிருஷ்ணன் கவுந்தப்பாடி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கவுந்தப்பாடி போலீசார், கோபாலகிருஷ்ணன் மற்றும்ருக்மணியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது கோபாலகிருஷ்ணனும், அவரது தாயும் சலங்கபாளையம் பகுதியில் பணம் இரட்டிப்பு கும்பலிடம் பணத்தை  கொடுத்து காத்திருந்து ஏமாந்துவிட்டு, மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டு போனதாக திடீரென நாடகமாடி, அப்பகுதியில் கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை எச்சரித்த போலீசார், பணம் இரட்டிப்பு மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் பவானி பகுதியில் சுற்றும் பணம் இரட்டிப்பு மோசடி கும்பல்தான், இந்த மோசடியிலும் ஈடுபட்டதா? என்னும் கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: