உலக கோப்பை டி20 முதல் சுற்று ஸ்காட்லாந்து அணியிடம் தோற்றது ‘வேஸ்ட்’ இண்டீஸ்

ஹோபர்ட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் முதல் சுற்று பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணியுடன் மோதிய 2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சியின் பொறுப்பான ஆட்டத்தால், ஸ்காட்லாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. ஜோன்ஸ் 20, கிராஸ் 3, கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 16, மெக்லியாட் 23 ரன், லீஸ்க் 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். முன்சி 66 ரன் (53 பந்து, 9 பவுண்டரி), கிறிஸ் கிரீவ்ஸ் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 2, ஓடியன் ஸ்மித் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 18.3 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 42 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றது.

ஹோல்டர் அதிகபட்சமாக 38 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கைல் மேயர்ஸ் 20, பிராண்டன் கிங் 17, எவின் லூயிஸ் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். மெக்காய் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்காட்லாந்து பந்துவீச்சில் மார்க் வாட் 3, பிராட் வீல் மைக்கேல் லீஸ்க் தலா 2, ஜோஷ் டேவி, சபியான் ஷரிப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஸ்காட்லாந்து 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஜார்ஜ் முன்சி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தகுதிச் சுற்றில் விளையாடிய முதல் லீக் ஆட்டங்களில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மண்ணைக் கவ்வியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அந்த அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற, அடுத்த 2 ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளன.

Related Stories: