ரிசர்வ் படையின் பதிலடி தாக்குதலால் சட்டீஸ்கரில் நக்சல்கள் ஓட்டம்: ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல்

கங்கேர்: சட்டீஸ்கரில் ரிசர்வ் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கிகள், வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றினர். சட்டீஸ்கர் மாநிலம் கங்கேர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள தேவ்கான் மற்றும் ஹுச்சாடி காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவு தகவல்கள் கிடைத்தன. அதையடுத்து நாராயண்பூர் பகுதியை நக்சல் தடுப்பு படை போலீசார் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது நக்சலுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அரை மணி நேரம் நீடித்த இந்த என்கவுன்டர் சம்பவத்தில், ரிசர்வ் படையின் தாக்குதலுக்கு பயந்து நக்சல்கள் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதையடுத்து குறிப்பிட்ட அந்த இடத்தை சோதனை செய்த போலீசார், அங்கிருந்து ஆயுதங்களை கைப்பற்றினர்.

இதுகுறித்து எஸ்பி பி.சதானந்த் கூறுகையில், ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், ஸ்டூஜ்கள், மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த தாக்குதலில் போலீசாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை’ என்றார். முன்னதாக பிஜப்பூர் மாவட்டம் டார்ரெம் முகாம் அருகே நடந்த நக்சல் தாக்குதலில் ரிசர்வ் படை போலீஸ்கார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: