விராலிமலை அரசு பள்ளிக்கு புதிய ஆய்வு கூட கட்டிடம்: பெற்றோர் வலியுறுத்தல்

விராலிமலை: விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வந்த ஆய்வு கூடம் அதன் சிதிலமடைந்து பயன்பாடற்று கிடப்பதால் அறிவியல் தொடர்பான பல்வேறு செயல் விளக்கங்களை முழுவதும் அறிந்து கொள்ள முடியாத நிலை மாணவர்களுக்கு உள்ளதாகவும் விரைவில் ஆய்வு கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்டி விரிவுப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். விராலிமலை சோதனைச்சாவடி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் சுமார் 800 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் 10,11,12ம் வகுப்பில் மட்டும் 400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இயற்பியல், வேதியியல் தொடர்பான பாடங்களுக்கு செயல்முறை விளக்கம் பெற ஆய்வகத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்ட அப்போதைய மாவட்ட நிர்வாகம் கடந்த 40 வருடங்களுக்கு முன் ஆய்வகம் கட்டிகொடுத்தது. கடந்த பல ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு வந்த அந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து அதன் உறுதித்தன்மையை இழந்ததால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி பூட்டப்பட்டது. அப்போது முதல் ஆய்வகம் என்பது ஒரு சிறிய அறையில் எந்தவித செயல்முறை விளக்க சாதனமும் இல்லாமலும், பாதுகாப்பற்ற வகையிலும் செயல்பட்டு வருகிறது.

இது பெற்றோர்களுக்கு கவலையளிப்பதாக உள்ளதோடு சிறிய அறையில் அமிலம் (ஆசிட்), ரசாயனம் (கெமிக்கல்) கையாளும் போது மாணவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.கல்வி தொடர்பான முன்னெடுப்புகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பத்தாம் வகுப்புக்கு தனியாக அறிவியல் ஆய்வகம், ப்ளஸ் 2 வகுப்பிற்கு உயிர் வேதியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம் என புதிய ஆய்வு கூடம் கட்டிதர வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: