சித்தூரில் இழப்பீட்டை சரி செய்ய விவசாயிகளுக்கு 30 சதவீத மானியத்தில் மாங்காய் பறிக்கும் இயந்திரங்கள்-மாவட்ட வேளாண்துறை அதிகாரி தகவல்

 சித்தூர் : சித்தூரில் இழப்பீட்டை சரி செய்ய விவசாயிகளுக்கு 30 சதவீத மானியத்தில் மாங்காய் பறிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வேளாண்துறை அதிகாரி மதுசூதன் தெரிவித்தார். சித்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாங்காய் விவசாயிகளுடன் மாவட்ட வேளாண்துறை அதிகாரி மதுசூதன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது:

மாநிலத்திலேயே சித்தூர் மாவட்டத்தில் அதிகளவு மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு மாங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில்  ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டரில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். மாங்காய் சீசனில் பூக்கள் வரும் நேரத்தில் புழுக்கள் அதிகளவு ஏற்பட்டு பூக்களை அழித்து வருகிறது.  

ஒவ்வொரு ஆண்டும் 25 முதல் 40 சதவீதம் வரை இழப்பீடை விவசாயிகள் சந்திக்கின்றனர். இதனை கட்டுபடுத்த வேளாண் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து, களை பறிக்கும் இயந்திரங்கள், ஏர் உழுதும் இயந்திரங்கள் 50 சதவீதம் தள்ளுபடியில் வழங்க உள்ளது. இதனை ஒவ்வொரு விவசாயிகளும் பயன்படுத்தி பயனடைய வேண்டும். இழப்பீடை சரி செய்ய புதிதாக மாநில அரசு மாங்காய்களுக்கு அணிவிக்கும் கவர்கள் மற்றும் மாங்காய் பறிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை 30 சதவீதம் மானியத்தில் வழங்க உள்ளது.

வேளாண்துறை அலுவலகம்  மண்டல விவசாயத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் அவர்களது பாஸ்புக் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல்களை சமர்ப்பித்து மாங்காய் பறிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை பெற்று பயனடையலாம். சீசன் முடிந்த பிறகு மரக் கிளைகளை எவ்வாறு அகற்ற வேண்டும். செடிகளுக்கு உரம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எத்தனை கிலோ உரம் பயன்படுத்த வேண்டும்.    செடிகளுக்கு எந்தெந்த மாதங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என  வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை கூறும் படி விவசாயிகள் நடந்து கொண்டால் அதிக மகசூல் பெறலாம்.

கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் மாங்காய் விலை போகாததால் மாபெரும் நஷ்டம் அடைந்தனர். விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து விடுபட மாநில அரசு அடுத்த வருடத்தில் இருந்து மாங்காய் விலை நிர்ணயிக்கும். அதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாம்பழ ஜூஸ் தொழிற்சாலைகள் உள்ளன. கூடுதலாக, ஜூஸ் தொழிற்சாலை திறக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. எனவே, விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க மாவட்ட தலைவர் கொத்தூர் பாபு, துணை தலைவர் ஜெயச்சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: