ஐதராபாத்தில் 4வது நாள் வைபவ உற்சவம் மாதிரி கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை : ஐதராபாத்தில் வெங்கடேஸ்வர வைபவ உற்சவத்தின் 4ம் நாளான நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் லட்சுமியுடன் கூடிய பெருமாளை காண திரளான பக்தர்கள் குவிந்தனர். சுவாமிக்கு 1 மணிநேரம் அபிஷேகம் செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள என்டிஆர் மைதானத்தில் அமைக்கப்பட்ட மாதிரி கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள வெங்கடேஸ்வர வைபவ உற்சவம் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

4வது நாளான நேற்று காலை வெங்கடேஸ்வர சுவாமிக்கு அபிஷேக சேவை நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று பக்தி மனமுருக தரிசனம் செய்தனர். முன்னதாக சுப்ரபாதம், தோமாலை சேவை, கொலுவு, அர்ச்சனை மற்றும் அதனை தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.

 ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் காலை அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில், பெருமாள் சிலையில் மார்பில்  உள்ள  மகாலட்சுமியின் சிலையில்  தொடங்கி  அபிஷேகம் நடைபெறும். இந்த சேவையை ராமானுஜர் தொடங்கி  ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதில்  புனுகு தைலம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது  போன்ற புனித முலிகை கலவை நீரால் சுமார் 1 மணிநேரம் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு மகாலட்சுமிக்கும், பெருமாளுக்கும் மஞ்சளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்பகத்தில் உள்ள லட்சுமியுடன் கூடிய பெருமாளின் உண்மையான வடிவத்தை வெள்ளிக்கிழமை அபிஷேக சேவையில் மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்த சேவையில் சுவாமி பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கண்டு தரிசிக்க வேண்டும் என  விரும்புவார்கள்.பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஐதராபாத்தில் நடைபெற்ற வெங்கடேஸ்வர வைபவ உற்சவத்தில்  சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.  அபிஷேகம் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக தீர்த்ததுடன்  தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், நிஜப்பாத தரிசனமும், தொடர்ந்து சர்வ தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிைய தரிசித்தனர்.

Related Stories: