குத்தகைக்கு வழங்கிய சொத்தை மீட்டு தரக்கோரி கோட்டையில் தீக்குளிக்க முயன்ற கும்பகோணம் பெண்ணால் பரபரப்பு

சென்னை: கும்பகோணம் மாநகராட்சியிடம் இருந்து சொத்தை மீட்டு தரக்கோரி சென்னை தலைமை செயலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். உரிய நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டதால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இது, சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தலைமை செயலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளை தனது தனிப்பிரிவு மூலம் நேரடியாக வாங்குவதால் ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து வருகின்றனர். அந்த மனுக்களின்படி உடனே நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று காலை தலைமை செயலகம் முன்பு நூற்றுக்கும் ேமற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்க வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது, பெண் ஒருவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் கையில் ஏற்கனவே கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற பெண் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கோட்டை போலீசாரிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கும்பகோணத்தை சேர்ந்த விமலா (51) என்று தெரியவந்தது. இவர், தனது நிலத்தை கும்பகோணம் மாநகராட்சிக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். குத்தகை காலம் முடிந்த பிறகு தனது நிலத்தை மீண்டும் தன்னிடம் கொடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.

ஆனால் அவரது நிலத்தை கும்பகோணம் மாநகராட்சி வழங்க மறுத்துள்ளது. இதனால் தனது நிலத்தை மீட்டு தரக்கோரி கும்பகோணம் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அவர் தற்கொலை முயற்சியில் இறங்கியது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தலைமை செயலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: