செட்டில்மென்ட் தொகையை தராமல் ஏமாற்றியதாக அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் வீடு முன்பு நடிகை தகராறால் பரபரப்பு: ரவுடிகளை ஏவி மிரட்டுவதாக ராமநாதபுரத்தில் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் மனு அளித்த நடிகை சாந்தினி, ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீடு முன் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தினி. இவர், கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது பரபரப்பு புகார் அளித்தார். ‘‘மணிகண்டனுடன் 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தேன்; 3 முறை கர்ப்பமடைந்து, அவரது நெருக்கடியால் கர்ப்பத்தை கலைத்தேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிகண்டன் ஏமாற்றி விட்டார்’’ என போலீசில் நடிகை சாந்தினி புகார் அளித்தார்.

இதன்படி, மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் சென்னை அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். பலமுறை அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புகாரை சாந்தினி தரப்பு திரும்ப பெற்று விட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்பிரச்னையில் இருந்து விடுபட்டு, அதிமுக நிகழ்வுகளில் மணிகண்டன் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு நடிகை சாந்தினி காரில் வந்தார். புகாரை திரும்பப் பெற தனக்கு இழப்பீடு தருவதாக உறுதியளித்திருந்த மணிகண்டன், அதன்படி தனக்கு சேர வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றி விட்டதாக கூறி, வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது மணிகண்டன் வீட்டில் இல்லை. அவர் மதுரையில் உள்ளதாக வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சாந்தினி, மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

நடிகை சாந்தினி‌  கூறுகையில், ‘‘இருவரின் நலன் கருதி 4 மாதங்களுக்கு முன் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில், என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஒப்புக்கொண்டார். எனக்கு செட்டில்மெண்ட் செய்வதாக உறுதி அளித்ததால் வழக்கை திரும்ப பெற்றேன். வழக்கை திரும்ப பெற்ற மறுநாள் முதல் மணிகண்டனை காண முடியவில்லை. 3 மாதங்களுக்கு மேலாகியும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரவுடிகளை ஏவி மிரட்டல் விடுத்து வருகிறார்.

அவர் மதுரையில் உள்ளதை அறிந்து தொடர்பு கொண்டபோது என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். நான் அவர் வீட்டிற்கு செல்லும் முன் அவர் அங்கிருந்து மாயமானார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் என்பதால் இங்கு அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கலாம் என நினைத்து இங்கு வந்தேன். அவரது தாயார் மற்றும் வீட்டில் உள்ளோர் என்னை தாக்க முயன்று விரட்டியடித்தனர். வழக்கை திரும்ப பெற அவர் ஒப்புக் கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் எனக்கு நியாயம் வேண்டும்’’ என்றார். இதனை தொடர்ந்து சாந்தினியை, ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கிருந்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று மதுரையில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு செல்வதாக கூறி நடிகை சாந்தினி காரில் புறப்பட்டு சென்றார்.

* மருத்துவமனையில் சிகிச்சை

நடிகை சாந்தினி, மதுரை மாவட்டம், மேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் வந்தார். தான் தாக்கப்பட்டதாகவும், சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறினார். இதனை தொடர்ந்து அவரை தலைமை மருத்துவர் ஜெயந்தி பரிசோதனை செய்தார். அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. காலில் மட்டும் வீக்கம் இருந்தது. அதனை தொடர்ந்து எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கம் வருவதாக சாந்தினி கூறவே, அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. பெரிய காயம் இல்லை என்பதால், புறநோயாளியாகவே அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

Related Stories: