‘வழக்கை வாபஸ் பெற வைத்தும் ஏமாற்றினார்’ அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட்டு நடிகை தகராறு

ராமநாதபுரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் மனு அளித்த துணை நடிகை சாந்தினி, ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டை இன்று முற்றுகையிட்டு தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன், சினிமா துணை நடிகை சாந்தினி 5 ஆண்டு சேர்ந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் 3 முறை கர்ப்பமடைந்த சாந்தினி மணிகண்டனின் நெருக்கடியால் கர்ப்பத்தை கலைத்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் ஏமாற்றியதாக போலீசில் சாந்தினி புகார் அளித்தார். இதன்படி, மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். பல முறை அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடைபெற்று வரும் வேளையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தினி புகாரை, அவர் தரப்பு திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்பிரச்னையில் இருந்து விடுபட்டு, அதிமுக நிகழ்வுகளில் மணிகண்டன் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு துணை நடிகை சாந்தினி, இன்று காலை 11  மணிக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய அவர் கண்ணீர்மல்க கூறியதாவது: ‘‘என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய மணிகண்டன், இழப்பீடு தருவதாக கூறி வழக்கையும் வாபஸ் வாங்க வைத்தார். இப்போது இழப்பீடுஏதும் தராமல் ஏமாற்றி வருகிறர். எனக்கு நியாயம் வழங்க வேண்டும்’’ என்று கூறி வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார். ஆனால், மணிகண்டன் அங்கு இல்லை, மதுரையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாந்தினி  மதுரை புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: