சோனியாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் உண்டு... காங்கிரசை கார்கே பலப்படுத்துவார்!: ஜி-23 தலைவரான மணீஷ் திவாரி கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுக்கு, கட்சியில் எப்போதும் முக்கியத்துவம் உண்டு என்றும், கார்கே காங்கிரசை பலப்படுத்துவார் என்றும் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 19ம் தேதியும் அறிவிக்கப்படும். தலைவர் பதவிக்கான போட்டியில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்பி சசிதரூரும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையில் மாற்றங்கள் கோரிய ஜி-23 அதிருப்தி தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சிக்காக தனது வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணித்த மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியை அவர் பலப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுக்கு, கட்சியில் எப்போதும் முக்கியத்துவம் உண்டு. ஜனநாயக முறைப்படி பாஜகவில் தேர்தல் எப்போது நடந்தது என்பதை அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்’ என்றார். ஜி-23 தலைவர்களில் ஒருவராக சசிதரூர் இருந்த போதும், மணீஷ் திவாரி அவருக்கு ஆதரவாக வேட்பு மனு தாக்கல் செய்ய போகவில்லை. மாறாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவாக அவர் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: