அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட்ட நடிகை சாந்தினி: வழக்கை வாபஸ் பெற வைத்து ஏமாற்றி விட்டதாக கண்ணீர்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை சினிமா நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது சினிமா நடிகை சாந்தினி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கடந்த 5 வருடங்களாக மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்த தம்மை திருமணம் செய்வதாக கூறி பலமுறை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அதன்பேரில் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தம்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மணிகண்டன் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை சாந்தினி இன்று ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதற்காக மணிகண்டன் வீட்டின் முன் அமர்ந்திருந்த அவரை, உறவினர்கள் விரட்டி அடித்ததால், கண்ணீர் உடன் வீட்டிற்கு எதிரே காரில் ஏறி அமர்ந்திருந்தார். தம்மை வழக்கை வாபஸ் பெற வைத்து மீண்டும் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு துணை நடிகை சாந்தினி அங்கிருந்து சென்றுவிட்டார். நடிகையின் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: